பராமரிப்புப் பணி காரணமாக, கோடம்பாக்கம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையே, 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில், இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
கோடம்பாக்கம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையே, இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை – அரக்கோணம் இடையே, இயக்கப்படும் மின்சார ரயில்கள் மற்றும் தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் என மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில், போக்குவரத்துத்துறை சார்பில், இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இன்று தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 10.00 மணி முதல் மதியம் 03.15 மணி வரை, தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.