தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிகத் தளங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து பெங்களூரு செல்லவும், பெங்களூருவில் இருந்து கோவை செல்லவும் இந்த இரயிலையே பொது மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, சாமானிய, ஏழை எளிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் இரயிலாக உதய் எக்ஸ்பிரஸ் இரயில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரு-கோயம்புத்தூர் உதய் இரயில் திருப்பத்தூரில் நின்று செல்ல வேண்டும் என இரயில்வே வாரியத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, பெங்களூரு-கோயம்புத்தூர்-பெங்களூரு உதய் இரயில் திருப்பத்தூரில் நின்று செல்ல இரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நிறுத்தம் செயல்பாட்டிற்கு வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.