உருது பள்ளியில் மாறுவேடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த தீவிரவாதியை, 22 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்த ஹனிப் ஷேக் என்பவர் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு, தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் சிமி இயக்க செயல்பாடுகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர். இதை அடுத்து ஹனிப் ஷேக் தலைமறைவானார். போலீசார் அவரை தீவிரவமாக தேடி வந்தனர். பின்னர், 2002-ஆம் ஆண்டு அவரை டெல்லி நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது.
ஹனிப் ஷேக் தொடர்பான தகவல்களை சேகரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழு நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அவர் தொடர்பான தகவல்களை சேகரித்தது. இந்த தகவல்கள் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவுக்கு உதவியாக இருந்தன. மேலும், அவர் மகாராஷ்டிராவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, ஹனிப் ஷேக்கை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் புசாவல் நகரில் முகமதின் நகரில் இருந்த ஹனிப் ஷேக்கை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தலைமறைவாகி, 22 ஆண்டுகள் கழித்து அவர் பிடிபட்டுள்ளார்.
ஹனிப் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, புசாவல் நகரில் ஒரு உருது பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.