தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நிறைவடைந்தது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி, என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கினார்.
மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற கோஷத்துடன் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் சாதனைகளை தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைபயணம் 5 பகுதிகளாக தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் 900 கி.மீ. தூரமும் யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டது.
யாத்திரையில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆன் லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒன்றரை லட்சம் பேர் பதிவு செய்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், என் மண் என் மக்கள் யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஒரு, ‘ட்வீட்’ போட்டாலே பூகம்பம் வெடிக்கும்போது, 10 ஆயிரம் கி.மீ. அண்ணாமலை நடக்க போகிறார் ஸ்டாலின் அவர்களே, தி.மு.க., ஆட்சி என்ன ஆகப்போகிறதோ என கேள்வி எழுப்பினார். உலகிலேயே அதிக ஊழலில் திளைக்கிறது திமுக அரசு என்றும் அவர் கூறினார்.
ஆரம்பம் முதலே அண்ணாமலையின் யாத்திரைக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். குறிப்பாக இளைஞர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
ஒரு கட்டத்தில் அண்ணாமலையில் பேச்சை கேட்பதற்காகவே ஒவ்வொரு ஊரிலும் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியது. திமுக ஆட்சியின் சீர்கேடு, வாரிசு அரசியல், dmk files,மாநில அமைச்சர்களின் ஊழல், ஜால்ரா போடும் திமுக கூட்டணி கட்சிகள் என அண்ணாமலையின் ஆவேச பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.
அதேபோல் மத்திய பாஜக அரசின் சாதனைகள், பொருளாதாரம் குறித்து புள்ளிவிவரங்களுடன் ஆதாரங்களை அடுக்கிய அவரின் பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசியல் புள்ளிகளின் ஊழல்களை ஆதாரங்களுடன் பட்டியிலிட்டு கேள்வி எழுப்பினர். இதேபோல், உள்ளுர் பிரச்சினைகள் தொடர்பாக அவர் எடுத்து வைத்து கேள்விகள் ஆளும் தரப்பை மட்டுமின்றி அப்பகுதி அரசியல்வாதிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதேபோல் அண்ணாமலை அறிவித்த புகார் பெட்டியில் ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்தன. அந்த மனுக்கள் அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பப்பட்டு உரிய தீர்வு பெற்று தரப்பட்டது. சில புகார்களுக்கு அவரின் பேச்சு மூலம் தீர்வு காணப்பட்டது.
இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும் அறநிலையத்துறை தொடர்ச்சியாக அவமானப்படுத்தி வருவதை பார்த்து பொதுமக்கள் மனம் வெதும்பி இருந்தனர். இது குறித்து யாராவது பேச மாட்டார்களா என ஏங்கி காத்திருந்த அவர்களுக்கு, அண்ணாமலையின் பேச்சு வடிவில் சரியாக சவுக்கடி கொடுக்கப்பட்டது.
என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்டுத்தியுள்ளதாகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக சுமார் 105 நாட்கள் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவடைந்தது.
நிறைவு நாள் அன்று திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் யாத்திரை நடைபெற்றது. இதற்காக காலை 9 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணாமலை தனது பயணத்தை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து நிறைவு விழா நடைபெறும் பல்லடம் மாதப்பூருக்கு தொண்டர்கள் புடை சூழ சென்றார். அங்கு பிரதமர் மோடி யாத்திரையை முடித்து வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆரவார கோஷம் எழுப்பினர்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் என் மண்ணிலும் பாஜக ஆட்சி அமைய வேண்டும், அதனால் என் மக்கள் வாழ்க்கையிலும் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என லட்சிய நோக்கத்துடன் யாத்திரை சென்ற அண்ணாமலையின் நோக்கம் நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றால் அது மிகையில்லை.