தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இப்பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது. குலசேகரப்பட்டினம், அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன.
வ.உ.சி துறைமுகத்தில் ரூ.7055.95 கோடி மதிப்பில் தூத்துக்குடி வெளித் துறைமுக கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவின் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்க கூடிய உள்நாட்டு நீர்வழி கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதற்கான எரிபொருள் மையம் ரூ.1950 கோடி மதிப்பில் முதன்முதலில் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உருவாகிறது. ரூ.265.15 கோடி மதிப்பில் தூத்துக்குடி மூன்றாவது வடக்கு நிலக்கரி தளத்தை இயந்திர மயமாக்கப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் 124.32 கோடி ரூபாய் மதிப்பில் தினமும் 5 மில்லியன் லிட்டர் அளவுக்கு கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் அமைகிறது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் பணிகள் ரூ.4,586 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.
இரயில்வே திட்டப் பணிகள் ரூ.1477 கோடி மதிப்பில் நடக்க உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத்தலமாக்கும் பணிகளையும் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே அமைச்சகங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இத்திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளன.
தூத்துக்குடியில் அரசு விழாவை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் திருநெல்வேலி புறப்படுகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.