தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
“நாடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரத்தில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும்.
தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். தூத்துக்குடியில் ரூ.4,000 கோடியில் சாலைகளை மேம்படுத்த 4 திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ரயில்கள், சாலை வழியே பயணிக்கும் மக்களுக்காக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 75 கலங்கரை விளக்கங்கள், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகளை நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறேன். தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது தமிழ்நாடு எனத் தெரிவித்தார்.
சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சியடையும். மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் புதிய சகாப்தத்தை படைக்க உள்ளது.
தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் நல்ல உறவு மேலும் உறுதியாகவிருக்கிறது. கசப்பான உண்மையை சொல்கிறேன்; முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.
காங்கிரஸ் ஆட்சியின்போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்த நலத்திட்டங்கள் இப்போது நிறைவேறுகின்றன.
மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன். தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகைகள், மத்திய அரசின் திட்டங்களை பிரசுரித்து வெளியிடாது. ஒன்றிய அரசின் திட்டங்களை பத்திரிகைகள் பிரசுரித்து வெளியிடுவதற்கு இங்குள்ள அரசு விடாது, இருந்தாலும் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன், மூன்றாவது முறையாக நாம் அரசு அமைக்க போகிற நேரத்தில், இந்த உத்தரவாத்ததை நிறைவேற்றுவேன் எனத் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகமக்கள் என் மீது அன்பு மழையை பொழிந்து வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.