இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி வருகை தந்ததைக் கொண்டாடும் வகையில் இஸ்ரோ இந்த ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டை ஏவியுள்ளது.
பிரதமர் மோடி இன்று காலை தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் வைத்து குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி பங்கேற்ற விழா முடிவடைந்ததை அடுத்து குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி என்ற சிறிய ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, ரோகிணி ராக்கெட் (Rohini Sounding Rocket (RH-200)) இந்திய விண்வெளி ஆய்வு மையம் மூலம் விண்ணில் இன்று (பிப்.28) மதியம் 1.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சிறிய ரக ரோகிணி ராக்கெட் 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறிய ரக ராக்கெட் ஏவப்பட்டதை முன்னிட்டு மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரியதாழை தூண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிலோ மீட்டர்) வரையிலான கடற்பகுதி ஆபத்தான பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இஸ்ரோ) ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.