தமிழகத்தில் இருக்கும் திமுக அரசு, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டிருப்பதை, பிரதமர் மோடி குறிப்பிட்டுச் சொன்னார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தூத்துக்குடியில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நெடுஞ்சாலை, உள்நாட்டு கப்பல் போக்குவரத்து, ரெயில்வே திட்டங்கள் உள்ளிட்ட சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும், நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அதன் பின்னர், திருநெல்வேலியில் தமிழக பாஜக சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அலைகடலெனக் கூடி ஆர்ப்பரித்த மக்களின் நடுவே மிகுந்த உற்சாகமாக உரையாற்றினார்.
நமது பிரதமர் அவர்கள் பேசுகையில், நேற்றைய தினம் திருப்பூர், மதுரைக்குச் சென்றிருந்தபோதும், இன்று திருநெல்வேலியிலும், முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்துத் தரப்பு தமிழக மக்களும் பாஜகவின் மீது வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கை வெளிப்பட்டதையும், அந்த நம்பிக்கையை, பாஜக நிச்சயம் காப்பாற்றும் என்றும், உண்மையான சமூக நீதியும், நேர்மறையான அரசியலையும் பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் காப்பாற்றும், இது மோடியின் உத்தரவாதம் என்றும் உறுதியளித்தார்.
மேலும், தமிழக மக்கள் எதிர்காலத்தைக் குறித்து, தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திப்பவர்கள் என்றும், பாஜகவின் அணுகுமுறையும் சித்தாந்தமும், தமிழக மக்களின் எண்ணத்தோடும், சிந்தனையோடும் மிகவும் ஒத்துச் செல்வதால், தமிழக மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், பாஜகவுடன் நெருக்கமாக உணரத் தொடங்கி இருக்கிறார்கள் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், உலக நாடுகளோடு இந்தியாவும் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த வளங்கள் மிகுந்து இருக்கும் தமிழகமும் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், நமது நாடு புதிய சிந்தனையோடு செயல்பட்டு கொண்டிருக்கும் போது, தமிழகமும் நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கப்போகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நமது நாட்டைக் குறித்து உலக நாடுகளின் பார்வையில் மாற்றம் வந்திருப்பதையும், உலக மக்கள் இந்தியர்களை பெருமையாக பார்த்துக் கொண்டிருப்பதும், மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி என்றும், இந்த மாற்றம், நிலையான, உறுதியான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் என்பதை தற்போது தமிழக மக்கள் உணர்ந்து கொண்டு, பாஜகவின் பக்கம் நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் எடுத்துக் கூறினார்.
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கிராமப்புற வீடுகளில் இருந்த குடிநீர் குழாய்கள் வெறும் 21 லட்சம் மட்டுமே. 2014 ஆம் ஆண்டு, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
40 லட்சம் வீடுகளுக்கு, உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவசமாக சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்கள் மூலமாகவே, நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் உருவாகியிருக்கிறது என்பதையும், செல்லும் இடமெல்லாம், தாய்மார்கள், பெண்கள் திரளாக வந்து ஆசீர்வதிப்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து, அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார் நமது பிரதமர் அவர்கள்.
மக்கள் நலன் காக்க, மத்திய அரசு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது, தமிழகத்தில் இருக்கும் திமுக அரசு, அந்தத் திட்டங்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டிருப்பதை, நமது பிரதமர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்.
மேலும், தமிழக மக்கள் எதிர்காலத்தைக் குறித்து, தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திப்பவர்கள் என்றும், பாஜகவின் அணுகுமுறையும் சித்தாந்தமும், தமிழக மக்களின் எண்ணத்தோடும், சிந்தனையோடும் மிகவும் ஒத்துச் செல்வதால், தமிழக மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி… pic.twitter.com/o2ZIQRDzPT
— K.Annamalai (@annamalai_k) February 28, 2024
தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் எதற்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல், குறைகள் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் திமுக அரசையும் மீறித்தான் மக்களுக்கான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார். மத்திய அரசின் திட்டங்களை திமுக தடுப்பது, மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக மட்டும்தான், அவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை கூறினார்.
பாஜகவுக்கு நாடு முக்கியம், மக்கள் முக்கியம். வலிமையான, வளமான பாரதம் முக்கியம் என்று கூறிய நமது பிரதமர் அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த நமது மாண்புமிகு மத்திய இணையமைச்சர் L முருகன் அவர்களை இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கியிருப்பதையும், அமைச்சர் ஆக்கியிருப்பதையும், பாகிஸ்தானில் இருந்து நமது விமானப் படை வீரர் திரு அபிந்தன் அவர்களை மீட்டதையும், இலங்கையில் இருந்து நமது மீனவர்களை மீட்டதையும் நினைவுபடுத்தி, நமது நாடு இன்று வலிமையான பாரதம், வளமான பாரதம் என்றும், நாட்டு மக்கள் பாதுகாப்புக்கே முன்னுரிமை என்றும் உறுதிபடுத்தினார்.
இன்றைய தினம், தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் விமான தளத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு, சீனா நாட்டுக் கொடியை வைத்து விளம்பரம் செய்திருக்கும் திமுகவைக் கடுமையாகக் கண்டித்த நமது பிரதமர் அவர்கள், மேலும் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டபோது, நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் திமுகவால் இதனை ஏற்க முடியவில்லை.
திமுக, மக்களின் நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். வெறுப்பு அரசியலை பரப்புகிறார்கள். தங்கள் ஒரு குடும்பத்தின் வளர்ச்சியைத் தவிர மாநிலத்தின் வளர்ச்சி அவர்களுக்கு முக்கியமில்லை. ஆனால், ஊழல் செய்து பணம் சம்பாதிக்க, மக்களின் நம்பிக்கையைச் சிறுமைப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை எதிர்க்கும் திமுக தமிழகத்தில் இருந்து விரைவில் அகற்றப்படும் என்றும் உறுதி தெரிவித்தார்.
தென்தமிழகத்தில், நமது மத்திய அரசு மேற்கொள்ளும் உட்கட்டமைப்பு வளர்ச்சி முதலீடுகள் குறித்தும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் சூரிய மின் சக்தி திட்டங்கள் நிறைவடையும் நிலையில் இருப்பதையும், விருதுநகரில் அமைந்திருக்கும் ஜவுளி பூங்கா மூலம் 2,00,000 பேருக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்தும், மூக்கையூர் பூம்புகார் ஆகிய துறைமுகம் பணிகள் குறித்தும், சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மிக வேகமாக மேம்படுத்தப்படும் துறைமுக உள்கட்டமைப்புகள், சாலைப்பணிகள், திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் இவற்றால், தொழில்துறையிலும், போக்குவரத்திலும் ஏற்படவிருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் குறித்தும் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகள் மேற்கொள்ளவிருக்கும் நலத்திட்டங்கள் குறித்த உறுதியான திட்டங்களை வைத்திருப்பதாகவும், பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்திருக்கும் நமது நாட்டை, மூன்றாவது இடத்திற்கு மிக வேகமாக முன்னேற்ற, இந்தத் திட்டங்கள் நிச்சயம் உதவியாக இருக்கும் என்றும், வரும் காலத்தில், செயற்கை நுண்ணறிவுத் துறை மூலம், நமது நாடும் வளர்ச்சியடைந்து, நமது நாட்டின் அனைத்து வீடுகளும் உலக நாடுகளுக்கு இணையான வளர்ச்சியைப் பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வளர்ச்சியை முன்னிறுத்தும் பாஜகவை எதிர்ப்பது, குடும்ப அரசியலை முன்னிறுத்தும் திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் தான். தந்தை, அவருக்குப் பிறகு மகன், அவருக்குப் பிறகு பேரன் என்ற வரிசையில், நாட்டை விட, தங்கள் குடும்பத்தை மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் கட்சிகள் இவை. ஊழல் செய்து சம்பாதிக்க நினைக்கும் கட்சிகள். மக்களை, மொழி, இனம், மதம், ஜாதி என ஏதாவது ஒன்றை வைத்துப் பிரித்து வைக்க நினைக்கும் இந்தக் கட்சிகளின் எண்ணம் ஈடேறப்போவதில்லை என்றும், தமிழக பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரை மக்களை ஒற்றுமைப்படுத்தும் யாத்திரை என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், பாஜக சகோதர சகோதரிகளின் உழைப்பிற்கு ஒரு மடங்கு மேலாக, மக்களுக்காக தாம் உழைப்பேன் என்றும் நமது பிரதமர் அவர்கள் உறுதியளித்தார்.