நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, எட்டு மாநிலங்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டம் புது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்த விவாதம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பி.எல். சந்தோஷ், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், அசாம் மற்றும் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் 5 மாநிலங்கள் அடங்கிய முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உத்திரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.