இந்தியாவின் நெருங்கிய கூட்டாளி மொரீஷியஸ் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் இன்று காணொலி மூலம் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 6 மாதங்களில் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூக்நாத்துடன் தாம் நடத்திய ஐந்தாவது சந்திப்பு இது என்றும், இந்தியா, மொரீஷியஸ் இடையேயான திறன்மிக்க, வலுவான மற்றும் தனித்துவமான கூட்டாண்மைக்கு இது சான்று என தெரிவித்தார்.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையில் மொரீஷியஸ் முக்கிய கூட்டாளியாக இருப்பதாகவும், சாகர் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் சிறப்பு கூட்டாளியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் இரு தரப்பு உறவு உள்ளது. பரஸ்பர ஒத்துழைப்பின் புதிய உயரங்களை எட்டியுள்ளது. யுபிஐ மற்றும் ரூபே அட்டைகள் இந்த உறவுக்கு நவீன டிஜிட்டல் இணைப்பை வழங்கியதை நினைவு கூர்ந்தார்.
இந்தியா எப்போதும் மொரீஷியஸின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறிய பிரதமர், கோவிட் தொற்றுநோய் அல்லது எண்ணெய் கசிவு எதுவாக இருந்தாலும், மொரீஷியஸூக்கு இந்தியா அளித்த ஆதரவை எடுத்துரைத்தார்.
மொரீஷியஸ் மக்களுக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதன்மையான நோக்கம் என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில், மொரீஷியஸ் மக்களுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவியுடன் 1,000 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதியை இந்தியா வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
மொரீஷியஸில் மெட்ரோ ரயில் பாதைகள், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், ச காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை, குடிமைப்பணிக் கல்லூரி, விளையாட்டு வளாகங்கள், உள்கட்டமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
2015-ம் ஆண்டு அகலேகா மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இன்று கூட்டாக தொடங்கி வைக்கப்பட்ட இந்த வசதிகள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு, செழிப்பு, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். பிரத்யேக பொருளாதார மண்டல கண்காணிப்பு, கூட்டு ரோந்து, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் போன்ற அனைத்து துறைகளிலும் ஒத்துழைத்து வருகிறோம் என்று பிரதமர் மேலும் கூறினார்.
அகலேகாவில் இன்று தொடங்கப்பட்டுள்ள விமான ஓடுபாதை, படகுத்துறை இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் என்றும், மொரீஷியஸின் கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொரீஷியஸில் மக்கள் மருந்தக மையங்களை அமைக்க பிரதமர் ஜுக்நாத் மேற்கொண்ட முடிவைப் பாராட்டிய பிரதமர், இதன் மூலம் இந்தியாவின் மக்கள் மருந்தக முன்முயற்சியில் இணைந்த முதல் நாடு மொரீஷியஸ் என்றும், இது சிறந்த தரமான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொதுவான மருந்துகளை வழங்குவதன் மூலம் மொரீஷியஸ் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறினார்.
எதிர்காலங்களில் இந்தியா மற்றும் மொரீஷியஸ் உறவுகள் புதிய உச்சத்தை அடையும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.