விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் இரயிலின் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட இரயில் நிலையங்கள் உள்ளன.
இந்த வழித்தடத்தில் சோழன் விரைவு இரயில், செந்தூர் விரைவு ரெயில், உழவன் விரைவு இரயில், மன்னை விரைவு இரயில், சென்னை எழும்பூர்-காரைக்கால், தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு இரயில் உள்ளிட்டவை செல்கிறது.
மேலும், மன்னார்குடி-பாகத் கி கோதி, மன்னார்குடி-திருப்பதி, ராமேஸ்வரம்- திருப்பதி, ராமேஸ்வரம்-புவனேஸ்வர், ராமேஸ்வரம்- பனாரஸ், காரைக்கால்-மும்பை என பல்வேறு விரைவு இரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் இதுவரை 100 கி.மீ. வேகத்தில் இரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், இரயிலின் வேகத்தை 10 கி.மீ. உயர்த்தி, 110 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தெற்கு இரயில்வே நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் இடத்திற்கு விரைவாகச் செல்ல முடியும் என்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.