டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு 50 கிலோ போதைப் பொருளை கடத்த முயன்ற 3 பேரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பவுடருடன் சூடோ பெடரின் எனப்படும் போதை பொருளை கலந்து நூதனை முறையில் அவர்கள் கடத்த முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதில் முக்கிய குற்றவாளியான திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் என்பவர் செயல்பட்டதை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும், இதுவரை வெளிநாடுகளுக்குச் சுமார் 3,500 கிலோ போதை பொருளை கடத்தியிருப்பது விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் சர்வதேச மதிப்பு 2,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஜாபர் சாதிக் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், பொதிகை இரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மதுரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தியபோது, சாலமன் பிரகாஷ் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து 30 கிலோ மெத்தாஅம்பேட்டாமைன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.