நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில், நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சென்னையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் தொடங்கி, பல்லாவரம் வரை இந்த பேரணி நடைபெற்றது. சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “100 சதவீதம் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக தான், இந்த சைக்கிள் பேரணியின் நோக்கமாகும். ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து தேர்தல் தேதியன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும் என்று கூறினார்.