மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடல் போல் திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக தெரிவித்தார்.
மேற்கு வங்க மக்கள் மாநில அரசின் செயல்பாடுகளால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். சந்தேஷ்காலி சம்பவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை ஆதரிப்பதற்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பக்கம் மாநில அரசாங்கம் இருப்பதாக கூறினார்.
நீதி கேட்டு பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு செவிசாய்க்கவில்லை. தற்போது மேற்குவங்க மாநில பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மேற்கு வங்க மக்களை ஏழைகளாக வைத்திருக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
மேற்கு வங்க மக்கள் தொடர்ந்து டிஎம்சிக்கு வாக்களித்துள்ளனர், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் மற்றொரு பெயராக மாறியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.