மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக மத்திய தேர்தல் குழு அடுத்த வாரம் மீண்டும் கூடுகிறது.
மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் 29ஆம் தேதி இரவு நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மேலும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும், கட்சியில் உயர்மட்ட தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பாஜக சார்பில் போட்டியிடும் சுமார் 160 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் ஆலோசனை நடத்த பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் (சிஇசி)தலைமை அலுவலகத்தில் மார்ச் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.அப்போது மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரச்சார வியூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.