பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 10 நாட்களில், பன்னிரண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
மார்ச் 4ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
பின்னர் தமிழகம் செல்லும் பிரதமர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் சென்னையில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்று மீண்டும் ஹைதராபாத் செல்கிறார். மார்ச் 5 ஆம் தேதி, சங்கரெட்டியில் பல வளர்ச்சித் திட்டங்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.
தெலுங்கானாவில் இருந்து, ஒடிசா செல்லும் பிரதமர் மோடி, ஜாஜ்பூரில் உள்ள சண்டிகோலேயில் பல வளர்ச்சித் திட்டங்கங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் சண்டிகோலேயில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து அவர் மேற்கு வங்கம் செல்கிறார்.
மார்ச் 6-ம் தேதி கொல்கத்தாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பின்னர் பராசத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.அங்கிருந்த பீகார் செல்லும் பிரதமர் மோடி, பெட்டியாவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.
மார்ச் 7 ஆம் தேதி,ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி, ஸ்ரீநகரில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.மார்ச் 8 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் முதல் தேசிய படைப்பாளி விருது வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மார்ச் 9ஆம் தேதி, மேற்கு கமெங்கில் உள்ள சேலா சுரங்கப்பாதையைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் அருணாச்சலப் பிரதேசத்துக்குச் செல்கிறார். அப்போது, இட்டாநகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அருணாச்சல பிரதேசத்தில் இருந்து, அஸ்ஸாம் செல்லும் பிரதமர், அங்கு ஜோர்ஹாட்டில் உள்ள லச்சித் பர்புகான் சிலையை திறந்து வைக்கிறார்.அதன்பிறகு, ஜோர்ஹாட்டில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி செல்லும் பிரதமர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். மார்ச் 10 ஆம் தேதி, உத்தரபிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை நாட்டுககு அர்ப்பணிக்கிறார்.
மார்ச் 11 துவாரகா விரைவுச்சாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மாலையில் டிஆர்டிஓ நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். மார்ச் 12 ஆம் தேதி, பிரதமர் மோடி குஜராத்தின் சபர்மதிக்கு விஜயம் செய்கிறார். பின்னர் அவர் ராஜஸ்தான் செல்கிறார். ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
மார்ச் 13 ஆம் தேதி , பிரதமர் குஜராத் மற்றும் அஸ்ஸாமில் மூன்று குறைக்கடத்தி திட்டங்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.