ஜம்மு காஷ்மீர் மாநிலம் முகல் சாலை பகுதியில், கடும் பனிப்பொழிவுக்கு நடுவே சிக்கி தவித்த 7 மலையேற்ற வீரர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. காஷ்மீரின் பெரும்பாலான சுற்றுலாத்தலப் பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள், மரங்கள் உட்பட அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
குறிப்பாக, காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள புகழ்பெற்ற முகல் சாலை பகுதியில் திடீரென பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. சாலைகளில் பனிக்குவியல்கள் காணப்படுவதோடு, சில இடங்களில் பனிப்பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.
மலைகளில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மலை பயணம் செய்வதை தவிர்க்குமாறு காஷ்மீர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.