மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகே குடியிருப்புப் பகுதியில் பாத்திரத்திற்குள் தலை மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த சிறுத்தையை, வனத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை உணவு தேடி
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு செல்வது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து, சிறுத்தை ஒன்று அருகிலுள்ள கிராமத்திற்குள் புகுந்தது. இது உணவு தேடி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி வலம் வந்தது.
அப்போது, அங்கிருந்த மாட்டுத் தொழுவத்தினுள் புகுந்த சிறுத்தை, அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக் கொண்டது.
தலையை வெளியே எடுக்க முடியாததால், நீண்ட நேரம் போராடிய சிறுத்தை ஒரு கட்டத்துக்கு மேல் செய்வதறியாது, களைப்பில் அங்கேயே படுத்து வலியில் துடித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையினை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இதை அடுத்து, சிறுத்தையின் கால்களைக் கட்டி, பாத்திரத்தை வெட்டி எடுகக முயன்றனர். தொடர்ந்து, 5 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக சிறுத்தையின் தலையை பாத்திரத்தில் இருந்து விடுவித்தனர்.
பின்னர், சிறுத்தையை பாதுகாப்பாக கூண்டுக்குள் அடைத்த வனத்துறையினர், குடியிருப்புப் பகுதியில் இருந்து காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.