சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மக்களவை தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 10 நாட்களில், பன்னிரண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதனிடையே கடந்த 27ஆம் தேதி பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள், பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதும், தமிழகத்தை தன் இதயத்தில் பா.ஜ.க. வைத்துள்ளதாக தெரிவித்தார். மத்தியில் 10 ஆண்டு காலம் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்திற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கவும், நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.
சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.