தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில், 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு சிறையில் கைதிகளை தீவிரவாதிகளாக மாற்ற தூண்டப்பட்ட வழக்கு, பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக, ஏழு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகம், தமிழகம், கேரளா உட்பட 7 மாநிலங்களில், 17 இடங்களில், இன்று காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத சதிகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர்கள்இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இதனிடையே , கடந்த ஜனவரி 12-ஆம் தேதி, பெங்களூரு சிறைச்சாலையில் கைதிகளை தீவிரவாதிகளாக மாற்ற தூண்டுதல் மற்றும் தற்கொலை தாக்குதல் சதி வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதி உள்ளிட்ட எட்டு பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி நசீர், 2013 முதல் பெங்களூரு மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அதே நேரத்தில் ஜேடி என்ற ஜுனைத் அகமது மற்றும் சல்மான் கான் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
மற்றவர்கள் சையத் சுஹைல் கான், முகமது உமர், ஜாஹித், சையத் முடாசிர் பாஷா மற்றும் முகமது பைசல் ரப்பானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட எட்டு நபர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.