ராமர் குறித்தும், பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்தும் சர்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசாவிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.ஆ.ராசா ராமரையும், பாரத மாதாவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பேசினார்.
மேலும் தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால் இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழகம் தனியாக போய்விடும் என்றும் அவர் கூறி இருந்தார்.
ஆ.ராசாவின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வரும் வெறுப்புப் பேச்சுகள் குறையாமல் தொடர்வதாகவும், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் அழைப்புக்குப் பிறகு, இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பகவான் ராமரை ராசா கேலி செய்வதாகவும், மணிப்பூர் தொடர்பாக இழிவுபடுத்தும் கருத்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஒரு தேசம் அல்ல. ஒரே தேசம் என்றால் ஒரே மொழி, ஒரே பாரம்பரியம், ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும்.ஆனால் இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகிறது. எனவே இந்தியா ஒரு தேசம் அல்ல ஒரு துணைக்கண்டம் என ராசா தெரிவித்துள்ளதை அவர் தமது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அ.ராசாவின் பேச்சுக்கு காங்கிரஸும் மற்ற இண்டி கூட்டணிக் கட்சிகளும் அமைதியாக இருப்பது ஏன் என்றும், அவர்களின் பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன் என்றும் அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார்.