கிறிஸ்துவ சர்ச் பணியாளர்களுக்கு அரசு மக்கள் பணத்தில் நல வாரியம் எதற்கு? எனத் திமுக அரசுக்கு இந்து முன்னணி சரமாரிக் கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக, மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் தலைமையில் கிறிஸ்துவ தேவாலய பணியாளர்கள் நல வாரியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சர்ச் நிர்வாகத்தில் எந்த இடத்திலும் தமிழக அரசு தலையிட முடியாது. சர்ச் வருமானத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. சர்ச் நிர்வாக தேர்தலில் நிற்பவர்கள் பல கோடி செலவு செய்கிறார்கள். அப்படி இருக்க கிறிஸ்துவ சர்ச்களின் பணியாளர்களுக்கு அரசு மக்கள் வரி பணத்தில் நல வாரியம் எதற்கு அமைக்க வேண்டும்?
தேர்தல் நெருங்க நெருங்க திராவிட மாடல் ஆட்சி மக்கள் வரிபணத்தை வாரிக் கொடுத்து தங்களது சிறுபான்மை விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. இது அப்பட்டமான ஓட்டு வங்கி அரசியல் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
இந்துக்களுக்கான எந்த திட்டமும் கோவில் வருமானத்தில் தான் செய்யப்படுகிறது. மேலும் கோவில் வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நிர்வாகச் செலவினங்கள் என்ற பெயரில் அரசு ஒவ்வொரு ஆண்டும் எடுத்து கொள்கிறது.
ஆனால் சர்ச், மசூதி வழிபாட்டு தலங்களில் நடக்கும் நிகழ்வுகளில் தெருவில் நின்று பார்ப்பதற்குக் கூட அந்த மதத்தினரின் அனுமதியின்றி மூக்கை கூட நுழைக்க முடியாது என்ற நிலையிலும் கூட சிறுபான்மையினருக்கு ஓடோடி ஏன் உதவி செய்ய துடிக்கிறது?
காரணம், அவர்கள் மத தலைவர்களின் கட்டளைப்படி ஓட்டளிக்கிறார்கள். அதேசமயம் இந்துக்கள் சாதி வாரியாக அரசியல் விசுவாசப் படி ஏமாற்றப்படுகிறார்கள்.
சமீபத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் குறித்த கூட்டமானது நடைபெற்றது. அதில் பல அறிவிப்புகளை முதல்வர் அறிவித்தார். அதன்படி, இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு கஞ்சிககு நல்ல தரமான பச்சை அரிசி சுமார் 27 கோடிக்கு 7040 மெட்ரிக் டன் தரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அளவும் நிதியும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் இந்து ஆலயங்களில் அன்னதான திட்டத்தைத் விரிவுபடுத்தி அறிவித்தார் முதல்வர். ஆனால் அன்னதானத்திற்கு அரசு ஏன் அரிசியோ பருப்போ தருவதில்லை. அந்தச் செலவினங்கள் முழுவதும் கோவில் பணத்தில் செய்யப்படுகிறது. அப்படியிருக்க அந்த நிகழ்வை துவக்கி வைக்க முதல்வரும் அமைச்சரும் எதற்கு? என்ற கேள்வி ஒவ்வொரு இந்துவின் உள்ளத்திலும் எழ வேண்டும்.
மக்கள் ஒவ்வொருவரும் வரி கொடுக்கிறார்கள். அந்த வரிப்பணத்தை சிறுபான்மையினர் அதுவும் அவர்கள் மதத்தை வளர்க்க பாதுகாக்க உள்ள சர்ச் மசூதிகளுக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து தருவது நியாயமா?
திராவிட அரசியல் பற்றி இந்துக்கள் உணர வேண்டும். இந்துக்கள் தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க முழு உரிமை உள்ளது.ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினருக்கு நமது வரிப்பணத்தை இறைப்பார்கள் என்றால் வரும் தேர்தலில் இந்துக்கள் தமது வலிமையை காட்ட வேண்டும்.
அப்போதுதான் குறைந்தபட்சம் நமது அழுகுரலை அரசியல் வாதிகள் கேட்கவாவது செய்வார்கள். இல்லை என்றால் இந்துக்கள் நாலாந்தர குடிமக்களாக வாழ வேண்டிய இழி நிலை தமிழகத்தில் தொடரும் என தெரிவித்துள்ளார்.