உலக பணக்காரர்கள் குறித்த தரவரிசை பட்டியலை ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவர், அண்மையில் தனது நிறுவனத்தின் 8 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றார். மேலும், பங்குச்சந்தையில் அமேசான் பங்குகள் விலை உயர்ந்தது. இதன் காரணமாக, ஜெப் பெசாஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதை அடுத்து, சுமார் 198 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார்.
ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் சி.இ.ஓ. பெர்னார்ட் அர்னால்ட் சுமார் 197 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளார். இதை அடுத்து, மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் 179 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சுமார் 150 பில்லியன் அமெரிக்கா டாலருடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 11-வது இடத்திலும், அதானி குழும தலைவர் கௌதம் அதானி 12-வது இடத்திலும் உள்ளனர்.
















