முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாபாஸ் நதீம் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஷாபாஸ் நதீம். இதுவரை இவர் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் 72 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் முதல்தர கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி இதுவரை 542 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ஷாபாஸ் நதீம் 542 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதில் 28 முறை ஐந்து விக்கெட்டுகளையும், 7 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக 10 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது.
இதுதவிர பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஷாபாஸ் நதீம் 2 சதம், 8 அரைசதங்கள் என 2784 ரன்களை எடுத்துள்ளார். இப்படி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாபாஸ் நதீம் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவரது ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.