தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை உணர்ந்த இண்டி கூட்டணி தலைவர்கள் பதற்றத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பராசத்தில் நடைபெற்ற பெண்கள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் வருவதை உணர்ந்த இந்திய கூட்டணி தலைவர்கள் பதற்றத்தில் உள்ளனர். அதனால் அவதூறுகளை வீச தொடங்கியுள்ளனர்.
என் குடும்பத்தைப் பற்றிக் கேட்கிறார்கள். இங்கு இருக்கும் மக்கள் அனைவரும் எனது குடும்பம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாங்கள் மோடியின் குடும்பம் என தெரிவித்து வருகின்றனர்.
நான் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினேன். நான் ஒரு துறவியாக அலைந்தேன். பணம் இல்லை, ஆனால் ஒரு நாள் கூட நான் வெறும் வயிற்றில் உறங்கியதில்லை, அந்த நேரத்தில் ஏழைகள் என்னைக் கவனித்துக்கொண்டார்கள்.
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடனும் நான் குடும்ப உறவை உணர்கிறேன், எனது சேவை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன். மோடியின் உடலின் ஒவ்வொரு அங்கமும், அவரது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்தக் குடும்பத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், இந்த தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் கேடயமாக நிற்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.