பாஜகவில் இணைந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசி ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையும், சிறந்த சமூக சேவகியுமான, சகோதரி, ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி பாரதப் பிரதமர் மோடி, நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, நேற்றைய தினம் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
புதுக்கோட்டை சமஸ்தான மகாராஜா ராஜகோபால தொண்டைமான், 1948 ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவுடன், புதுக்கோட்டை சமஸ்தானத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைத்து, சமஸ்தானத்திற்குச் சொந்தமான 48 லட்சம் ரூபாய் நிதியையும், மொத்த சொத்துக்களையும், நமது நாட்டிற்கே வழங்கியவர். புதுக்கோட்டை, தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டபோது, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வழங்கியவர்.
நாட்டுக்காக, மக்கள் நலனுக்காகவே வாழ்ந்த பெரும் பாரம்பரியம் மிக்க ராஜகுடும்பத்தில் இருந்து, சமூகத்திற்காகவும், பொதுமக்களுக்காகவும் உழைப்பதற்கு முன்வந்திருக்கும் சகோதரி ராதா நிரஞ்சனி தொண்டைமான் வருகை, பாஜகவுக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பது உறுதி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















