தமிழகத்தில் அதிகளவில் பெண் வேட்பாளரின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெறும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. இதனையடுத்து கூட்டணி, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் இருந்து விருப்ப மனுக்கள் பெறபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பட்டியல் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், சில குறிப்பிட்ட தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்ற விருப்பதையும் தலைமையிடம் எடுத்து கூறுவோம் என்றும் அவர் கூறினார்.
வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு தொடர்பாக தேசிய தலைமை முடிவு எடுக்கும் என்றும், பரிந்துரை பட்டியலில் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.