ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயம், சுற்றுலா தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெறும் “விக்சித் பாரத், விக்சித் ஜம்மு காஷ்மீர்” நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
அப்போது விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் ரூ.1,400 கோடி மதிப்பிலான சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் ஜம்மு & காஷ்மீரில் புதிதாக பணியமர்த்தப்பட்ட சுமார் 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குகிறார். அப்போது பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்த மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.