சிறுமியின் கொலை தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், அம்மாநில டிஜிபி ஸ்ரீனிவாஸ் நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தார்.
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த தகவல் பரவியதால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கும்பலைக் கலைக்கப் போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாப்பம்மாள் கோயில் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, சிறுமியின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சிறுமியின் கொலை தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், அம்மாநில டிஜிபி ஸ்ரீனிவாஸ் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, சிறுமி கொலை குறித்து காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார்.
ஆனால், சிறுமி வழக்கு தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிஜிபியிடம் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார். இந்த நிலையில், முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் குறித்து விசாரணை செய்த பின்னர் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார்.