மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முக்கிய தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான தபஸ் ராய் (Tapas Roy), பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் ( Sukanta Majumdar) மற்றும் சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari) ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலரால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. ஊழல், கொலை, கொள்ளை, நில அபகரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதனால், அதிருப்தி அடையும் ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து வருகின்றனர். பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்பதால், அவர்கள் பாஜகவில் இணைகின்றனர்.
அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், மூத்த தலைவருமான தபஸ் ராய் பாஜகவில் இணைந்துள்ளார்.
இவர் கடந்த திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில், மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து தபஸ் ராய் கூறியதாவது, தவறான ஆட்சி மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து போராட விரும்புகிறேன். மாநிலத்தை ஆளும் அராஜக அரசை தூக்கி எறிந்து விட்டு, அமைதியான மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.