சேவாபாரதி அமைப்பு மீது அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வலாற்று சிறப்பு மிக்க தீர்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சேவாபாரதி அமைப்பு சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சேவாபாரதி அமைப்பு தேசிய அளவில் செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.
சுனாமி, நில நடுக்கம், பெரு வெள்ளம், கொரோனா நோய் பரவல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் அளித்து, அவர்களின் துயர் துடைப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
குறிப்பாக, சமுதாயத்தில் பின்தங்கிய பகுதிகளிலும் இலவச கல்விதான மையங்கள், சுய உதவி குழுக்கள், பண்பாட்டு வகுப்புகள் என தேசத்தில் 1.5 லட்சம் நிரந்தர சேவைப் பணிகளையும் சேவாபாரதி தனது ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மூலம் செய்து வருகிறது. சேவாபாரதியின் தன்னலமில்லா இந்த சேவைப் பணியை பாராட்டி, பல மாவட்ட நிர்வாகங்கள் பாராட்டு தெரிவித்து, விருதுகளை வழங்கியுள்ளன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், கடந்த 2020 -ம் ஆண்டு கொரோனா பரவல் ஊரடங்கின் போது தந்தை – மகன் என இருவர் அப்பகுதி காவல் நிலைய லாக்கப்பில் வைத்து கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, “கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அதில், இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத சேவாபாரதி தமிழ்நாடு தொண்டு நிறுவனத்தை இணைத்து அவதூறாக செய்தி வெளியிட்டது.
லட்சக்கணக்கான மக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி பல்வேறு வகையான சேவைப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவாபாரதி மீது, உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சேவா பாரதியின் மனுவை ஏற்றுக் கொண்டு மார்ச் 6 -ம் தேதி அன்று வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் நியாயமும், ஜனநாயகமும் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை சேவா பாரதி தமிழ்நாடு மனமார வரவேற்கிறது.
மேலும், அவதூறு பரப்பி எங்களுடைய பணிகளை முடக்க நினைக்கும் ஜனநாயக விரோத சக்திகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.