அடுத்த 10 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமராக பதவி விகிப்பார் என உள்துறை அமைச்சர் அமித் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் டிவி உச்சி மாநாடு 2024 இல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது,கடந்த 10 ஆண்டுகளில் அரசாங்கம் செய்த நல்ல பணிகள் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிப்பார் என்று கூறினார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கான அரசியல் கண்ணோட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நம் நாட்டில் ஒரு ஆற்றல்மிக்க ஜனநாயகம் உள்ளது. கடந்த காலத்தின் மனநிலை ஜாதி,மதம் சார்ந்ததாக இருந்தது. தற்போது சமாதானத்தின் அடிப்படையில், பிரதமர் மோடி செயல்திறன் அரசியலை நிறுவியுள்ளார்.
யார் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதை செயல்திறன் தீர்மானிக்கும். செயல்படுபவர்களுக்கு நாடு வாய்ப்பளிக்கும், நாங்கள் சிறப்பாக செயல்பட்டால் ஆட்சியில் இருப்போம்.அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே ஆட்சியில் இருப்பார் என்று என்னால் சொல்ல முடியும்.
பிரதமரின் குடும்பம் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியதற்காக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவையும் அமித் ஷா சாடினார். முட்டாள்தனமாகப் பேசி தரம் தாழ்த்தப் பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நான் மோடி ஜியை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். அவருடன் நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறேன். ஒரு வகையில் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு கூறியது சரி என நினைக்கிறேன். ஏனெனில் குடும்பம் உள்ளவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும் பிரதமராகவும், முதல்வராகவும் ஆக்க முயற்சி செய்வார்கள் என்று அமித்ஷா கூறினார்.
40 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்காக மட்டுமே உழைத்தவர் மோடி. 23 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும், பிரதமராக இருந்தும் அவர் விடுப்பு எடுத்ததை பார்க்கவில்லை. காலை 5 மணி முதல் விடாமுயற்சியுடன் பணியாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அமித்ஷா கூறினார்.
ஜனநாயகத்தில், அரசுக்கு எதிராக எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் நாட்டு மக்கள் பதில் சொல்கிறார்கள். குடிமக்களை ஏமாற்றிய தலைவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். 23 ஆண்டுகால மோடி ஆட்சியில், முதலில் முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
அவர் மீது எதிர்க்கட்சிகள் கூட குறை கூற முடியாது எனறும் அமித் ஷா தெரிவித்தார். நாங்கள் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி செய்து வருகிறோம் என்று அமித் ஷா கூறினார். அனைத்து இந்தியர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் பிரதமரும், பாஜகவும் செயல்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.