2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். அசாம் செல்லும் பிரதமர் சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி நாளை ஜோர்ஹாட்டில் இருந்து 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்குத் தொடக்கிவைத்து, அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்.
சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூர் விமான நிலையத்திற்கு இன்று மாலை 4 மணியளவில் வரும் பிரதமர் மோடி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்திற்கு நேரடியாகச் செல்கிறார்.
தேசிய பூங்காவின் கோஹோரா ரேஞ்சில் உள்ள அசாம் காவல்துறை விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி இரவு தங்குகிறார். நாளை அதிகாலை, பூங்காவிற்குள் சஃபாரி மேற்கொள்ளளும் பிரதமர் மோடி, பின்னர் அருணாச்சல பிரதேசம் செல்கிறார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு, பிற்பகல் 1.30 மணியளவில் ஜோர்ஹாட் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் லச்சித் போர்புகனின் 84 அடி உயர சிலையைத் திறந்து வைக்கிறார்.
ஜோர்ஹாட்டில் உள்ள மெலெங் மெட்டெலி போத்தாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். மேலும் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
குவாஹாட்டியில் உள்ள பி. பாருவா புற்றுநோய் நிறுவனத்தில் குழந்தை பராமரிப்புப் பிரிவான டின்சுகியா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான ‘கிரஹ பிரவேஷ்’ விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.