பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் யானை மற்றும் ஜீப் சவாரி மேற்கொண்டார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்துக்கு சென்றார்.
இந்த பூங்காவை சுற்றி பார்த்த பிரதமர் மோடி பின்னர் மத்திய கோஹோரா மலைத்தொடரின் மிஹிமுக் பகுதியில் பிரதமர் மோடி யானை சவாரி மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அதே பகுதியில் ஜீப் சவாரியும் சென்றார். பிரதமருடன் பூங்கா இயக்குநர் சோனாலி கோஷ் மற்றும் பிற மூத்த வன அதிகாரிகள் உடன் சென்றனர்.
ஜோர்ஹாட்டில் புகழ்பெற்ற அஹோம் ஜெனரல் லச்சித் பார்புகனின் 125 அடி உயர வீரச் சிலையை பிரதமர் மோடி இன்று மதியம் திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் ஜோர்ஹாட் மாவட்டம் செல்லும் பிரதமர், அங்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய, மாநில அரசு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், அதே இடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.