கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்,
“மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பாக திமுக அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது.
திமுகவின் அயலக அணியில் இருந்தவர் தான் ஜாபர் சாதிக். இருப்பினும் இதுகுறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் டிஜிபி விளக்கம் கொடுத்து வருகிறார். ஜாபர் சாதிக்குடன் எடுத்த புகைப்படத்தை ஏன் உதயநிதி ஸ்டாலின் டெலிட் செய்தார். இதில் திமுக டிஜிபியை பலிகடா ஆக்க பார்க்கிறது.
சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. மீண்டும் பாஜக தலைமையில் மத்திய அரசு அமையும் போது அனைத்து பிரச்னைகளும் தீரும். கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சி பாஜக. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.
ஆ. ராசா குறித்து நான் வெளியிட்ட ஆடியோ, பொய் என்று அவர் சொல்லட்டும், அரசியலில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.
பாஜகவுக்கு அளிக்கும் ஓட்டு செல்லாது என்று சொல்கிற கட்சியிடம் அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேளுங்கள். அவர்களின் எம்பிக்கள் வெற்றி பெற்றால், டெல்லி சென்று யாரிடம் மனு கொடுப்பார்கள்.
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான ஓட்டு. கோவை மட்டுமல்லாமல், பல்வேறு தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்பினாலும், ஒரு மாநிலத் தலைவராக எனக்கு பல்வேறு கடமைகள் உள்ளன. தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு, வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். தமிழகத்தில் திமுகவிற்கு 90% பணம் தேர்தல் பத்திரம் மூலமாகவே வந்துள்ளது. இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் அதிக பணம் வந்துள்ளது திமுகவுக்கு தான் என தெரிவித்தார்.