பாஜக அரசின் வளர்ச்சி பணிகளை பார்த்து இண்டி கூட்டணி கட்சிகள் தூக்கத்தை தொலைத்த விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த நவீன விரைவுச் சாலைக்காக டெல்லி மற்றும் அரியானா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று துவாரகா விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விரைவுச் சாலைக்கு ரூ.9,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இன்று முதல், டெல்லிக்கும் ஹரியானாவுக்கும் இடையிலான போக்குவரத்து ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
இந்த நவீன விரைவுச் சாலை வாகனங்களில் மட்டுமின்றி டெல்லி மக்களின் வாழ்க்கையிலும் கியர்களை மாற்றும் வகையில் செயல்படும்.
ஒரு காலத்தில் துவாரகா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மக்கள் வருவதை தவிர்த்து வந்தனர். டாக்சி ஓட்டுநர்கள் கூட இங்கு வர மறுத்து வந்தனர். இந்த பகுதி முழுவதும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டது. ஆனால் இன்று பல பெரிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது நான் மட்டுமே தொடங்கி வைத்த திட்டங்கள். இது தவிர, பல முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி, எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடக்கி வைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகள் பல மடங்கு அதிகரிக்கும். பாஜக அரசு செய்து வரும் வளர்ச்சிப் பணிகளால் காங்கிரசார் மற்றும் இண்டியா கூட்டணியினர் தூக்கத்தை இழந்துவிட்டனர். முந்தைய அரசுகள் ஒரு சிறிய திட்டத்தை துவங்கி ஐந்தாண்டுகள் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டன. துவாரகா விரைவுச்சாலை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டில் நடைபெற்று வரும் விரைவான உள்கட்டமைப்பு பணிகள், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றும் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.