தமிழ் திரைப்படங்களில் ஒரு காட்சி அடிக்கடி வரும். ஏழையாக உள்ள கதாநாயகன் பணக்காரனாக மாறிக்காட்டுகிறேன் என சவால் விடுவார். அதேபோல் அடுத்த சில மணிநேரங்களில் அவர் கோடீஸ்வரனாக மாறி காட்டுவார்.
சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல், அதனை வினியோகம் செய்ய கொரியர் நிறுவனம், மக்கள் சேவை என்ற பெயரில் போதை பொருளை கடத்த ஆம்புலன்ஸ், சிறிய அளவிலான போதை பொருள் விற்பனைக்கு பிரியாணி கடை, மேல்மட்ட வர்க்கத்திற்காக கபே, சினிமா பிரபலங்களை மயக்க லாட்ஜ் என போதை பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்துள்ளான் இந்த ஜாபர் சாதிக்.
ஒரு சட்ட விரோத தொழிலை எவ்வாறு நேர்த்தியாக நடத்த வேண்டும் என்பதற்கு ஜாபர் சாதிக் சிறந்த உதாரணம் என்றே சொல்லலாம்.
போதையில் கிடைத்த பணத்தை முதலீடு செய்வதற்காக சினிமா தயாரிப்பு நிறுவனம், அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள், ரியல் எஸ்டேட் என பக்காவாக முதலீடு செய்துள்ளான் ஜாபர்.
போதைப்பொருள் கடத்தல் தொழில் பாதுகாப்புக்காக அரசியல் கட்சியில் பதவி, அரசியல் தலைவர்களுடன் நெருக்கம், சினிமா பிரபலங்களுடன் நட்பு என கன கச்சிதமாக தனது தொழிலை நடத்தி வந்துள்ளான் ஜாபர் சாதிக்.
சினிமா தொழிலில் தேர்ந்த பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் கூட நஷ்டத்தை தாங்க முடியாமல் மூடுவிழா நடத்தி விட்டு நடையை கட்டி வரும் நிலையில், ஒரே நேரத்தில் 3 படங்கள் தயாரிப்பு, அதிலும் தனது சகோதரர் ஹீரோ என மாஸ் காட்டியுள்ளான் ஜாபர்.
இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை தயாரித்து கொண்டிருந்த போது தான் டெல்லியில் உள்ள தனது நிறுவனத்தில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் சோதனை என செய்தி கிடைத்துள்ளது. அவ்வளவு தான். பார்ட்டி அப்படியே எஸ்கேப். உண்மையிலே இறைவன் மிகப்பெரியன் தான்.
டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருளான சூடோபெட்ரினை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது.
அதன் சர்வதேச மதிப்பு சுமார் 2 ஆயிரம் கோடி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து போக்குகாட்டிய ஜாபரை ஒரு வழியாக ஜெய்ப்பூரில் மடக்கினர் போலீசார். அவனை டெல்லி அழைத்து வந்து விசாரிக்க வேண்டிய விதத்தில் போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்போது அவன் அளித்த தகவல் போதை பொருள் தடுப்பு போலீசாருக்கே அதிர்ச்சியை அளித்துள்ளது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு பணத்தை வாரி இரைத்துள்ளது தெரியவந்தது. தமிழகத்தில் உள்ள அமைச்சர் ஒருவருக்கு ரூ.7 லட்சம் கொடுத்ததுள்ளதாகவும் ஜாபர் தெரிவித்துள்ளான்.
ஜாபரின் சென்னை வீட்டில் இருந்த சிசிடிவி பதிவு, வங்கிக்கணக்கு விவரம் உள்ளிட்டவை மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அமலாக்கத்துறையினரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்காக டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு புலனாய்வு குழு தமிழகத்தில் முகாமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே பல்வேறு இடங்களில் ரகசிய சோதனை நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜாபருடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் 14 சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று பல நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் வளத்தை அழிக்க வேண்டும் என்றால் தீவிரவாதம் தேவையில்லை. போதைப்பொருளை அனுப்பினால் போதும். அந்த பழக்கம் இளைஞர்களை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையே அழித்து விடும்.
போதை போருள் பழக்கம் மற்றும் கடத்தலைத் தடுக்க முடியாமல் பல முன்னேறிய நாடுகள் கூட தவித்து வருகின்றன. தற்போது தமிழகத்திலும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ஜாபர் சாதிக்கை வழக்கை தயவு தாட்சன்யம் இன்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வருங்கால சந்ததி வளமாக வாழ வேண்டும் என்றால் இது அவசியம் என்றால் மிகையில்லை.