கோவை மாவட்டம், ஆனைமலையில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் நன்னன் என்னும் மன்னன் ஆண்டு வந்த நன்னனூர் தற்போது ஆனைமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
நன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட உப்பாற்றங்கரையின் அருகே உள்ள அரசு தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது மன்னனின் உத்தரவு.
ஒருநாள் ஆற்றில் தனது வயது கொண்ட பெண்களோடு நீராட வந்த ஒரு இளம் பெண் அந்த மாமரத்தில் இருந்து தானாகவே ஆற்றில் உதிர்ந்து வந்த மாங்கனியை உண்டுவிட்டாள்.
இதனை அறிந்த நன்னன் அப்பெண்ணைக் கொலை செய்துவிடும்படி உத்திரவிட்டான். ஆனால், அவளது தந்தை தனது மகளின் எடையளவு தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தொரு ஆண் யானைகளையும் அறியாது செய்த தவறுக்கான தண்டம் செலுத்துவதாகக் கூறினார்.
ஆனால், மன்னன் அதனை ஏற்காமல் அப்பெண்ணைக் கொலை செய்ய உத்தரவிட்டான். கொலையுண்ட அந்தப் பெண்ணை மயானத்தில் சமாதிபடுத்தி, அதன்மீது அந்த பெண் போன்ற ஒரு உருவத்தை அமைத்து மயானத்தில் சயனித்த நிலையில் இருந்த அந்த பெண் நாளடைவில் மாசாணி என்று அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
இப்படி பெருமை வாய்ந்த பொள்ளாச்சி மாசாணி அம்மன் திருக்கோவிலில், வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி மற்றும் விழா காலங்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தைவிட அதிக அளவில் இருக்கும். குறிப்பாக, சுமார் 5 லட்சத்துக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
இங்கு அம்மனை தரிசனம் செய்வதன் மூலம், தங்களுக்கு வரும் துன்பங்கள் யாவும் நீங்குவதாகவும், கடன் குறைவதாகவும், எதிரிகளே இல்லாத நிலை ஏற்படுவதாகவும், பக்தர்கள் மெய்மறந்து சொல்கிறார்கள்.
இதனால், இந்த கோவிலுக்கு கோவை, திருப்பூர், கரூர் எனக் கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.