ஒட்டுமொத்த தேசத்திற்கும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வழியை குஜராத் காட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்தில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கோச்ராப் ஆசிரமத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். காந்தி ஆசிரம நினைவகத்தின் ரூ.1,200 கோடி மாஸ்டர் பிளானையும் அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, எதிர்கால சந்ததியினர் மற்றும் சபர்மதி ஆசிரமத்திற்கு வருபவர்கள் சர்க்காவின் சக்தி மற்றும் புரட்சியை ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றிலிருந்து உத்வேகம் பெறுவார்கள். பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தால் விரக்தியில் இருந்த தேசத்தின் மீது காந்தியடிகள் நம்பிக்கையை நிரப்பினார் என்று தெரிவித்தார். ஒட்டுமொத்த தேசத்திற்கும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வழியை குஜராத் காட்டியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான தெளிவான திசையை அவரின் தொலைநோக்கு காட்டுகிறது என்றும், கிராமப்புற ஏழைகளின் நலனுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும், மகாத்மா காந்தி வழங்கிய ஆத்ம நிர்பர்தா மற்றும் சுதேசியின் கொள்கைகளைப் பின்பற்றி ஆத்மநிர்பர் பாரத் பிரச்சாரத்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.
இயற்கை விவசாயம் குறித்தும் பேசிய பிரதமர், குஜராத்தில் 9 லட்சம் விவசாயக் குடும்பங்கள் இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் 3 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவின் பயன்பாடு குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் இந்தியாவின் சமீபத்திய சாதனைகளையும் அவர் விவரித்தார்.
இன்று, இந்தியா வளர்ச்சி அடையும் உறுதியுடன் முன்னேறிக்கொண்டிருக்கும் போது, மகாத்மா காந்தியின் இந்த ஆலயம் நம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகமாக உள்ளது. எனவே, சபர்மதி ஆசிரமம் மற்றும் கோச்ராப் ஆசிரமத்தின் வளர்ச்சி என்பது வரலாற்று இடங்களின் வளர்ச்சி மட்டுமல்ல. விக்சித் பாரதத்தின் உறுதி மற்றும் உத்வேகத்தின் மீது எங்களின் நம்பிக்கை என்றும் பிரதமர் கூறினார்.
காந்தியடிகளின் இலட்சியங்களும் அவருடன் தொடர்புடைய உத்வேகமான இடங்களும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தினமும் குறைந்தது 1000 குழந்தைகளை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று நேரத்தை செலவிட வேண்டும் என்ற பள்ளி நிர்வாகங்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.