குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு நேற்று (மார்ச் 11) அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அரசிதழிலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதை அடுத்து, நாட்டில் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
இராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள பாகிஸ்தான் அகதிகள், பட்டாசு வெடித்தும், மேளம் கொட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மோடி வாழ்க எனவும், பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பினர்.
டெல்லியில் உள்ள மஜ்னு கா தில்லாவில் வசிக்கும் பாகிஸ்தானிய புலம்பெயர்ந்தோர்கள் வண்ணப் பொடிகளை பூசி, தங்களுக்கு ஹோலி ஆரம்பமாகி இருப்பதாக தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அகதிகள் வண்ணப் பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி மகிழ்ந்தனர்.
“நாங்கள் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இங்கு வந்தோம். நாங்கள் இப்போது பாரத மாதாவைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இங்கு வாழ்கிறோம், எங்களுக்கு முன்னதாக தீபாவளி வந்துள்ளது, அதனை கொண்டாடுகிறோம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என அகதி ஒருவர் தெரிவித்தார்.
“மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபட்டது. நாங்கள் சாக விடப்பட்டோம்.. மிகவும் கஷ்டப்பட்டு இங்கு வந்தோம். நாங்கள் எங்கும் சேரவில்லை. இப்போது இந்திய அரசு CAA ஐ அமல்படுத்தியுள்ளது. எனவே, இது பெருமைக்குரிய விஷயம், அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” எனவும் இது மேலும் ஒரு அகதி தெரிவித்தார்.