குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் கருத்துக்கள் மற்றும் தத்துவம் குறித்து தனது எண்ணங்களை அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் எழுதினார்.
குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்கிய தண்டி அணிவகுப்பின் 94-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதியில் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான காந்தி ஆசிரம நினைவு மாஸ்டர்பிளானைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதியதாவது : காந்தியின் வாழ்க்கையிலும் பணியிலும் சபர்மதி ஆசிரமம் மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. கணக்கிட முடியாத உலகளாவிய சவால்களுக்கான தீர்வு காந்தியின் சமூக மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் மரபுரிமையாக உள்ளது. அவரது கருத்துக்கள் மற்றும் தத்துவம் என்றென்றும் பொருத்தமானதாக இருக்கும்.
அவரது (காந்தியின்) செய்தியை ஒருங்கிணைத்து ஒரு சிறந்த மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் முன்னேறி வருகிறோம்.சபர்மதி ஆசிரமத்தின் மறுவடிவமைப்புக்குப் பிறகு இளைஞர்கள் காந்தியின் பணி மற்றும் அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.