தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவரின் விளக்கம் பெற வேண்டும் என்றும் அதுவரை தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன் கவனமாகவும் முழுமையாகவும் பரிசீலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது. தேர்தல் பத்திரத் தகவல்களை மார்ச் 12ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் “கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்பிஐ சமர்ப்பிக்கும் விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்படும்” என்று தெரிவக்கப்பட்டது.
இந்நிலையில், பார் கவுன்சில் தலைவர் தீர்ப்பை நிறுத்தி வைக்க குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கவும் மறுபரிசீலனை செய்யவும் கோரலாம் என்றும் அதுவரை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வாய்ப்பு உள்ளது என்றும் சட்ட வல்லநர்கள் கூறுகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரொபதி முர்மு தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார். அவர் இந்தியா திரும்பியதும் இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.