ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி, ‘ஹைதராபாத் விடுதலை தினம்’ கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், 13 மாதங்களுக்கு ஹைதராபாத் பகுதிக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அப்பகுதி நிஜாமின் ஆட்சியின் கீழ் இருந்தது.
அப்போதைய, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால், ‘ஆபரேஷன் போலோ’ என்ற பெயரில், போலீஸ் நடவடிக்கை மூலம் 13 மாதங்களுக்குப் பிறகு, 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ஹைதராபாத் பகுதி நிஜாம் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.
இதனை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையிலும், இளைஞர்கள் மனதில் தேசப்பற்றை ஏற்படுத்தும் நோக்கிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினம் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.