மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹனுமன் படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா மற்றும் நடிகர் தேஜா சஜ்ஜாவை சந்தித்து பாராட்டி, நினைவு பரிசு வழங்கியுள்ளார்.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்த திரைப்படம் தான் ஹனுமான். ஆந்திராவில் சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் இப்படம் வெளியானது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயரும், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் பெரிய சாதனையைப் படைத்தது. 2024 ஆம் வருடத்தில் தெலுங்கில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அதிக வசூலைக் குவித்த படமாகவும், அதிக லாபத்தைக் கொடுத்துள்ள படமாகவும் இப்படம் அமைந்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹனுமன் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா மற்றும் படத்தின் கதாநாயகன் தேஜா சஜ்ஜாயை சந்தித்து பாராட்டி, அவர்களுக்கு ஹனுமன் சிலையை பரிசாக வழங்கியுள்ளார்.
Met the talented actor Shri @tejasajja123 and film director Shri @PrasanthVarma of the recent superhit movie Hanuman.
The team has done a commendable job of showcasing Bharat's spiritual traditions and the superheroes that have emerged from them. Best wishes to the team for… pic.twitter.com/pt8gNy9Rbh
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 12, 2024
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மீக பெரிய வெற்றி படமான ஹனுமன் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா மற்றும் நடிகர் தேஜா சஜ்ஜாயை சந்தித்தேன்.
பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தையும், அவற்றில் இருந்து தோன்றிய சூப்பர் ஹீரோக்கள் போன்ற சக்தியையும் வெளிப்படுத்தும் விதமான படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படக்குழுவின் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி என நடிகர் தேஜா சஜ்ஜா பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா, ” உங்களைச் சந்தித்தது ஒரு பாக்கியம். உங்களின் அன்பான வார்த்தைகளும், நீங்கள் ஊக்குவித்தும் எங்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று பதிவிட்டுள்ளார்.