கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ளது ‘ராமேஸ்வரம் கபே’ என்ற உணவகம். இந்த ஹோட்டலில், மார்ச் 1 -ம் தேதி, திடீரென குண்டு வெடித்தது. இதில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடி குண்டு வெடிப்பு விவகாரத்தில், சிரியா நாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது.
மேலும், வெடி குண்டு வைத்தவர் குறித்த தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் என்.ஜ.ஏ. அறிவித்தது.
இந்த விவகாரத்தில், பெல்லாரியைச் சேர்ந்த டெட்டனு என்ற நபரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். என்.ஐ.ஏ. விசாரணையில், டெட்டனு துணி வியாபாரம் செய்து வந்ததும், அதே வேளையில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில், சபீர் என்பவரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர்.
கைதான சபீர் முக்கியக் குற்றவாளி இல்லை என்றும், வெடி குண்டு வைத்தவருக்கு உதவியவர் என்றும், கைதான சபீர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான சபீரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.