டெல்லியில் போலி மருந்து தயாரித்து புற்றுநோய் மருந்து என விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி டிஎல்எஃப் கேபிடல் கிரீன்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரூ.100 மதிப்புள்ள பூஞ்சை எதிர்ப்பு மருந்தை காலி குப்பிகளில் நிரப்பி அவற்றை “உயிர் காக்கும்” புற்றுநோய் மருந்து என கூறி சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை விற்பனை செய்து வந்துள்ளனர்.
சுமார் இரு ஆண்டுகளில் 7000க்கும் மேற்பட்ட ஊசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்திய போலீசார், 7 பேரை கைது செய்தனர்.
இதேபோல் குருகிராமில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில், நீரஜ் சவுகான் என்பவன் போலி புற்றுநோய் ஊசி குப்பிகளை அதிக அளவில் சேமித்து வைத்திருந்தான். அந்த குடியிருப்பில் இருந்து 519 காலி பாட்டில்கள் மற்றும் 864 பேக்கேஜிங் பெட்டிகள் பறிமுதல் செய்தனர்.
டெல்லியைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவமனை ஊழியர்களான கோமல் திவாரி மற்றும் அபினய் கோலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஜெயினுக்கு மருத்துவமனையில் இருந்து காலி குப்பிகளை தலா ₹ 5,000 விலையில் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஏழு பேர் மீதும் கலப்படம் செய்தல், மோசடி செய்தல், போலி மருந்து தயாரித்தல் மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.