முதல்வர் மு.க.ஸ்டாலினால் மத்திய அரசின் திட்டங்களில் ‘கமிஷன்’ பெற முடியவில்லை, அதனால் தான் மாநிலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறார் என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது பேசியவர்,
தமிழகத்திற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கிய நிதி, முந்தைய யுபிஏ அரசு வழங்கியதை விட அதிகமாக உள்ளது. தமிழகத்தில் திமுக அரசும், கேரளாவில் உள்ள சிபிஎம் அரசும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்களில், ‘கமிஷன்’ பெற முடியவில்லை, அதனால் தான், மாநிலத்திற்கு நிதி ஒதுக்காததை காரணம் காட்டி, மத்திய அரசை குறை கூறி வருகிறார். இருப்பினும், மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்துள்ளனர்” என்று கூறிய முரளீதரன், பாஜக ஆட்சிக் காலத்தில் 1,300 கிமீ நீள ரயில் திட்டங்கள், 2,000 கிமீ ரயில் மின்மயமாக்கல், ஐந்து வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பல ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் சாலை கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் ரூ.17,300 மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணித்தார். மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை என திமுக அரசு குற்றம் சாட்டுகிறது.
இருப்பினும், முந்தைய UPA அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) இப்போது 282% உயர்த்தப்பட்டுள்ளது. 2010 முதல் 2015 வரை ரூ.33,581 கோடியாக இருந்த பேரிடர் நிவாரணத்துக்கான ஒதுக்கீடு, 2015-2020ல் ரூ.61,520 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது, 1.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,” என்றார்.
இதற்கிடையில், சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர், போதைப்பொருள் வியாபாரிகளுடன் திமுக தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.