போதைப் பொருளுக்கு எதிராக இணையதளம் வாயிலாக தமிழக பா.ஜ.க, இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாக பா.ஜ.க, குற்றம்சாட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அண்ணாமலை வலியுறுத்தினார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க, சார்பில், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் https://drugfreetamilnadu.com/ என்ற இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.
அதில், ‛‛ வாரத்தில் 15 மணி நேரம், போதைப்பொருளுக்கு எதிரான பிரசாரத்தை மேற்க்கொள்வதுடன், போதைப்பொருளுக்கு எதிராக இணைந்து பணியாற்றுவோம். இளைஞர்கள் மத்தியில் போதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமம் முதல் நகரங்கள் வரை செல்வோம். தீர்வு காண துணை நிற்போம். போதைப்பொருள் கலாசாரத்தை ஆதரிக்கும் தி.மு.க.,வை விரட்டுவோம்.
போதை கலாசாரத்தில் இருந்து தமிழகத்தை காப்போம்” என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, அதில் பெயர், மொபைல் எண், இமெயில், முகவரி, தொகுதி ஆகிய விவரங்களை கொடுத்தால், அண்ணாமலை கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதனை அந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.