அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கும் பாஜக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு முக்டோ (எஸ்டி) தொகுதியிலும், பாஜக மாநில தலைவர் பியூராம் வாகே பக்கே-கேசாங் (எஸ்டி) தொகுதியிலும், துணை முதல்வர் சௌனா மெய்ன் சௌகான் (எஸ்டி) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மூன்று அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் 16 புதிய முகங்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் பாமாங் பெலிக்ஸ் (நியாபின் தொகுதி), தொழில்துறை அமைச்சர் தும்கே பக்ரா (ஆலோ வெஸ்ட்) மற்றும் விவசாய அமைச்சர் டேஜ் டாக்கி (ஜிரோ-ஹபோலி) ஆகியோருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
மேலும் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு வந்த மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் தபீர் காவ் ஆகியோர் முறையே அருணாச்சல மேற்கு மற்றும் அருணாச்சல கிழக்கு தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று பாஜக கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.