ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை, ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், நேட்டோ கூட்டமைப்பில் இணைய முடிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றன. போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. ரஷ்யா, உக்ரைன் போர் தற்போதும் நீடித்து வருகிறது. அவ்வப்போது தாக்குதல்களை இருதரப்பும் தீவிரப்படுத்துகின்றன.
இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை, ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக, ரஷ்ய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் முன்பே வாக்குப்பதிவு நடந்தது. இதில், 40 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தலில், ஐந்தாவது முறையாக அதிபர் விளாடிமிர் புதின் வெற்றி பெற்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அரசியல் சாசன திருத்தங்களுக்கு பின்னர், புதின் 2036-ஆம் ஆண்டு வரை அரசியலில் அதிகாரத்தில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.